சென்னை,
‘ரீல்ஸ்’ அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாசாரத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை கிணத்துக்கடவு சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவர், ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் சடலத்துடன் செல்பி எடுத்து அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
முதல்-அமைச்சர் விஜய்யின் அமைச்சர்கள் எப்போதும் 'ரீல்ஸ்' மோகத்தில் மூழ்கிக் கிடப்பது போலவே, இன்று தமிழக இளைஞர்களும் வன்முறையை ஒரு 'மாஸ்' (Mass) செயலாகக் கருதி, கொலை செய்துவிட்டு ரீல்ஸ் எடுக்கும் அளவிற்குச் சீரழிந்து போயிருப்பது வேதனைக்குரியது.
தமிழகத்தில் தடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்களும், மதுவுமே இதுபோன்ற மிருகத்தனமான வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாகும். இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தவறிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, வெறும் ‘ரீல்ஸ்’ அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாசாரத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.