தமிழக செய்திகள்

விருதுநகர்: அனுமதியின்றி தயாரித்த பேன்சி ரக பட்டாசுகள் பறிமுதல்

பட்டாசுகள் தயாரிக்கும் பணி பாதுகாப்பு இல்லாமல் மரத்தடியில் நடைபெற்றது ஆய்வின் போது தெரியவந்தது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குருசாமி உத்தரவின் பேரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆண்டாள், மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் சத்யபாபு ஆகியோர் தலைமையில் சங்கரபாண்டியாபுரம் பகுதியில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது அப்பகுதியை சேர்ந்த ஸ்டாலின் ராஜா (வயது 45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் மட்டும் தயாரிப்பதற்காக அனுமதி பெற்ற பட்டாசு ஆலையாகும். ஆனால் அங்கு நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் தயாரிக்கக்கூடிய பேன்சி ரக வெடிகள் அதிகளவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணி பாதுகாப்பு இல்லாமல் மரத்தடியில் நடைபெற்றது ஆய்வின் போது தெரியவந்தது. ஆலை வளாகத்தில் அதிக அளவு பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததையும் ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக பட்டாசுகளை பறிமுதல் செய்து ஆலையில் உள்ள அறையில் வைத்து மண்டலத்துணை வட்டாட்சியர் பாண்டி 'சீல்' வைத்தார். தொடர்ந்து சங்கரபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் சத்யபாபு ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு விசாரணை நடத்தி ஆலையின் உரிமையாளர் ஸ்டாலின் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.