தமிழக செய்திகள்

மதுரை - குருவாயூர் ரெயிலில் "விஸ்டாடோம்' பெட்டி இணைப்பு: மலையின் அழகை ரசித்த பயணிகள்

மதுரையில் இருந்து குருவாயூருக்கு தினசரி ரெயில் இயக்கப்படுகிறது.

மதுரை,

இந்திய ரெயில்வேயில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் இயற்கையை கண்டு ரசிக்கும் வகையி லான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 'விஸ்டோடம்' என்ற பெயரிலான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரெயில் பெட்டிகளில் மேற்கூரை கண்ணாடியாக இருக்கும். அதன் வழியாக மலை, கடல் அழகை ரசிக்க முடியும். முதலில் தூரந்தோ எக்ஸ்பிரஸ், பின்னர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, வந்தே பாரத் ரெயில்களில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றன.

இதே போல் விஸ்டோடம் பெட்டிகளில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையில் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில், ரெயில் பெட்டிக்குள் இருந்து வெளியில் பார்த்து ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை கவருவதற்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, மதுரையில் இருந்து குருவாயூருக்கு தினசரி ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.15 மணிக்கு குருவாயூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் குருவாயூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மதுரையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு இயக்கப்படும் ரெயிலானது, விஸ்டோடம் பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் (வ.எண். 16327/16328) இருமார்க்கங்களிலும் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மலை, தென்காசி பொதிகை மலை, ஆரியங்காவு பாலம், தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை பயணிகள் ரசிக்கும் வகையில் இந்த ரெயில் பயணம் இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 360 டிகிரி கோணத்தில் சுழலும் இருக்கைகளும் அகண்ட ஜன்னல் கண்ணாடிகளும் இந்த பெட்டியில் உள்ளது.

SCROLL FOR NEXT