திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 798 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இது வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நேற்று முதல் தொடங்கி, வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) ஒரு நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த முகாம்கள் செயல்படும்.
இதில், 6 மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 எம்.எல். அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 எம்.எல். அளவும் வைட்டமின் 'ஏ' திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிராம மற்றும் நகரப்புற சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா (ASHA) பணியாளர்கள் மூலமாக அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களிலேயே இந்த வைட்டமின் 'ஏ' திரவம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
வைட்டமின் 'ஏ' என்பது மனித விழித்திரைக்கு தேவைப்படும் மிக முக்கிய உயிர்ச்சத்து ஆகும். இதன் குறைபாட்டினால் வரும் ஆபத்துகள்
• மாலைக்கண் நோய், உலர்ந்த விழித்திரை மற்றும் கண்பார்வை இழப்பு ஏற்படும்.
• உடல் வளர்ச்சி குறைபாடு, தோல் பிரச்சினைகள் மற்றும் மலட்டுத்தன்மை உண்டாகும்.
• சுவாசக்குழாய் நோய்த்தொற்று, ஜீரண மண்டல நோய்த்தொற்று மற்றும் தட்டம்மை போன்ற நோய்கள் எளிதில் தாக்கும்.
இந்த உயிர்ச்சத்து நோய் எதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. தினசரி உணவில் விலங்குகளின் கல்லீரல், மீன் எண்ணெய், மீன் முட்டை, இறைச்சி, மஞ்சள் நிற காய்கறிகள், பழங்கள், கரும்பச்சை கீரைகள் மற்றும் குடைமிளகாய் போன்ற வைட்டமின் 'ஏ' நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விடுபடாமல் வைட்டமின் 'ஏ' திரவத்தை புகட்டி, அவர்களுக்கு ஏற்படும் கண்பார்வை இழப்பைத் தடுத்து ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.