நாகர்கோவில்,
இந்தியாவின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே அதிக தூரம் பயணிக்கக் கூடிய விவேக் அதிவிரைவு ரெயிலும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திப்ரூகருக்கு செல்கிறது. 9 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ரெயில் 4.158 கி.மீ. தூரம் பயணிக்கிறது. முதலில் வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்ட இந்த ரெயில் தற்போது தினசரி ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை குமரி மாவட்ட மக்கள் பெரிய அளவில் பயன்படுத்துவது இல்லை. அதே சமயம் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் விவேக் அதிவிரைவு ரெயிலை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் கடந்த 2025-2026-ம் நிதி ஆண்டில் வருவாய் அடிப்படையில் முதல் 50 இடங்களை பிடித்த ரெயில்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் இடத்தை விவேக் அதிவிரைவு ரெயில் பிடித்துள்ளது. அதாவது ரூ.100 கோடியே 57 லட்சத்து 48 ஆயிரத்து 56 வசூலித்து இருக்கிறது.
நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரெயில் ரூ.6.59 கோடி வசூல் செய்து 11-வது இடத்தையும், கன்னியாகுமரி- புனே ரெயில் ரூ.5.14 கோடி வசூல் செய்து 22-வது இடத்தையும், கன்னியாகுமரி- பெங்களூரு ரெயில் ரூ.4.04 கோடி வசூல் செய்து 34-வது இடத்தையும் பிடித்துள்ளன. கன்னியாகுமரி- சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரெயில் ரூ.3.76 கோடி வசூல் செய்து 40-வது இடத்தை பிடித்து இருக்கிறது. இதில் வந்தே பாரத் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரெயில்களை குமரி மாவட்ட மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். குமரி மாவட்ட மக்களின் சென்னை பயணத்தை வந்தே பாரத் ரெயில் சுலபமாக்கி இருப்பதால் நெல்லை மற்றும் மதுரை வந்தே பாரத் ரெயிலையும் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.