தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை பெற்ற த.வெ.க. கட்சி, தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ள த.வெ.க. மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரை சந்தித்த அமைச்சர்கள் புஸ்சி ஆன்ந்த் மற்றும் ஆதவ் அர்ஜுன கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
த.வெ.க. தங்களுக்கான ஆதரவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளை தற்போது தொடங்கியுள்ளது. அதற்கான முதல் முயற்சியாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினைகள், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2029 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய அணியாக இணைந்து செயல்படுவதற்காக த.வெ.க. அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் கூட்டத்திற்கு த.வெ.க. அழைப்பு விடுத்துள்ளது.முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், புதிய கூட்டணியை உருவாக்குவது, கூட்டணிக்கான பெயர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், கட்சிகளுக்கும் விரைவில் அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது