தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் - செல்லூர் ராஜு

நான் எங்கும் செல்லமாட்டேன். அ.தி.மு.க.வில் கடைசி வரை தொண்டனாககூட இருப்பேன் என செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை,

மதுரை மாநகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பனகல்சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலை மையில் நடந்தது. கூட்டத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செல்லூர் ராஜுநிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து மாற்றுக்கட்சிக்கு சிலர் சென்றுள்ளனர். நான் சிறுவயதிலேயே எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகியாக இருந்தவன். நான் எங்கும் செல்லமாட்டேன். அ.தி.மு.க.வில் கடைசி வரை தொண்டனாககூட இருப்பேன். என்னை பற்றி கேலி கிண்டல் பண்ணுவார்கள். அதை பற்றி நான் கவலை படுவதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. குறித்து பேச நிர்மல்குமார் என்ன தூதுவரா?. அமைச்சர் அதிகம் பேசுகிறார். எங்கள் கட்சியில் இருந்தார். அவர் அங்கு சென்று அமைச்சர் ஆகிவிட்டார். இப்போது அவர் மதுரையில் சொகுசாக செல்லும் சாலைகள், பாலங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்ததுதான். மதுரைக்கு அமைச்சராக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என சொல்லுங்கள்.

எங்களுடைய வாக்குகள்தான் த.வெ.க.விற்கு சென்றது. இனி அது நடக்காது. அ.தி.மு.க. பாசமான, குடும்பமான கட்சி. அனைவரும் நண்பர்களாக, பிள்ளைகளாக, தம்பிகளாக இருந்தார்கள். அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என தெரியவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்கள் வெளியேறவில்லை. த.வெ.க. மின்மினிப்பூச்சி, பட்டாம்பூச்சி போல கானல் நீராக மாறும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.