தமிழக செய்திகள்

சட்டசபையில் வ.உ.சி., சுப்பராயன், ராமசாமி ரெட்டியார் படங்கள்; எடப்பாடி பழனிசாமி 23-ந்தேதி திறந்து வைக்கிறார்

சட்டசபையில் வ.உ.சி., சுப்பராயன், ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களை வருகிற 23-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

தலைவர்கள் படங்கள்

நாட்டுக்காக சேவை செய்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில், தமிழக சட்டசபை கூட்ட அரங்கில் அவர்களது படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் 1948-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி மகாத்மா காந்தியின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறக்கப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில் ராஜாஜியின் உருவப்படத்தை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு திறந்துவைத்தார்.

அதன்பிறகு, 1964-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி திருவள்ளுவரின் படத்தை, துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேன் திறந்துவைத்தார். 1969-ம் ஆண்டு, முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் உருவப்படத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார்.

காமராஜர் உருவப்படம்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, 5 தலைவர்களின் உருவப்படங்கள் சட்டசபையில் திறக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி, காமராஜரின் உருவப்படத்தை அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ் ரெட்டி திறந்துவைத்தார்.

1980-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி, ஒரே நேரத்தில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் புகைப்படங்களை அப்போதைய கேரள மாநில கவர்னர் ஜோதி வெங்கடாசலம் திறந்துவைத்தார்.

12 தலைவர்கள்

அதன்பிறகு, ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், 1992-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதை ஜெயலலிதா திறந்துவைத்தார். 2018-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி ராமசாமி படையாச்சியாரின் படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இவ்வாறு 12 தலைவர்களின் உருவப்படங்கள் சட்டசபையில் இடம்பெற்றுள்ளன.

எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்

இந்த நிலையில், கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, வருகிற 23-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அன்று, வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப் படங்களை சட்டசபை மண்டபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.