சென்னை,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவரும், வெள்ளையர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி பொருளாதாரப் போராட்டம் நடத்தியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 90ஆம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன்.
கத்தியின்றி, இரத்தமின்றி ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த தலைவர் என்றால் அது வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தான். வணிகத்தின் மூலம் இந்தியாவைக் கைப்பறிய ஆங்கிலேயர் அரசின் அடித்தளத்தை அதே வணிகத்தைக் கொண்டே தகர்க்க வேண்டும் என்று நினைத்தவர் அவர்.ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் தான் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கினார்கள்.
தேசப்பற்று என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அவர். அவரது போராட்டங்களையும், தியாகங்களையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி, அவர்களிடம் தேசப்பற்றை தழைக்கச் செய்ய நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.