தமிழக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட் டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) நடக் கிறது. அன்றைய தினம் வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பணியின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் டிஜிபி சந்தீப் ராய்ரத்தோர், சென்னை, தாம்பரம் காவல்துறை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.