சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், இசைக்குழு, கானா, டிஜே, திடீர் நடனக் குழு, அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் தேர்தல் குறித்த விளம்பரங்கள், வினாடி வினா, மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட 3 விழிப்புணர்வு பேருந்துகள், ஐபிஎல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் விழிப்புணர்வு விளம்பரப் பலகை, 1000 பேருந்து நிழற்குடைகள், 100 மின்னணு விளம்பரப் பலகைகள், பேருந்துகளின் பின்பகுதி, 3000 ஆட்டோக்கள் ஆகியவற்றில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பரம், வாக்காளரின் செல்பேசியில் தேர்தல் செய்தி குறித்த குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட பல்வகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 100% வாக்குப்பதிவு, ஓட்டுப்பதிவிற்கான மை வைக்கப்பட்ட விரல் வடிவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட இட்லி விழிப்புணர்வு கண்காட்சியினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இன்று (17.04.2026) மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டு, மக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கி 100 சதவீதம் வாக்களித்திட கேட்டுக்கொண்டார். இந்தக் கண்காட்சியினை பொது மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியினைப் பார்வையிட்ட மக்களுக்கு சுவையான பல்வேறு வடிவங்களிலான இட்லி, சிறுதானிய இட்லி, சாக்லேட் இட்லி உள்ளிட்ட இட்லி வகைககள் வழங்கப்பட்டது. மேலும், இதன் அருகில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பேருந்தில் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
“ தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.