தமிழக செய்திகள்

வாக்காளர் தகவல் சீட்டு தரும் பணிகள் விரைவில் தொடக்கம்

சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி தொடங்கியது. நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நாளை காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட வேண்டும்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த 18 வயதுடைய, அதாவது முதல் முறையாக வாக்களிக்க போகும் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விரைவு தபால் மூலம் அடையாள அட்டைகளை வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டு தரும் பணியை வரும் 10-ம் தேதி முதல் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்குச்சாவடி பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும். வரும் 17-ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பூத் சிலிப்-க்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது.