தமிழக செய்திகள்

நெல்லையில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஒரே நாளில் 3,713 பேர் விண்ணப்பம்

இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 3,713 பேர் விண்ணப்பித்தனர்.

சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 761 பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

3,713 விண்ணப்பங்கள்

நேற்றைய முகாமில் மொத்தம் 3,713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 1,728 பேர், இறப்பு, இடமாற்றம், கூடுதல் பதிவு ஆகியவற்றை நீக்க 51 பேர், முகவரி மாற்றம், பிழை திருத்தம், புகைப்பட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி விவர குறியீடு ஆகியவை தொடர்பாக 1,934 பேர் என மொத்தம் 3,713 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஏற்கனவே கடந்த 21-ந் தேதி 2,080 விண்ணப்பங்கள், 22-ந்தேதி 3,899 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

பார்வையாளர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தால் நெல்லை மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ள சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் ஆசியா மரியம் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, தேர்தல் தாசில்தார் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT