தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி... நாளை கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்!

கட்சிக்கு 2 பிரதிநிதிகள் வீதம் இதில் பங்கேற்பார்கள்.

சென்னை,

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தலைமைச்செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நாளை கூடுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

தமிழகத்தில் 1.1.2027 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் 2-ந் தேதி வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, நவம்பர் 12-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 11-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் டிசம்பர் 28-க்குள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பு முகாம்

அலுவலக வேலைநாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர். உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரின் அலுவலங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். வார இறுதி நாட்களில் நடக்கும் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் விண்ணப்பிக்க லாம். பெயர் சேர்க்க முகவரி மற்றும் வயதுச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டம்

இப்பணிகள் குறித்து ஆலோசிக்க, நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 7 மாநில கட்சிகள் மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு 2 பிரதிநிதிகள் வீதம் இதில் பங்கேற்பார்கள்.

SCROLL FOR NEXT