கிருஷ்ணகிரி,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
தமிழ்நாட்டின் உரிமைகளை திமுகவால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்பதை 2 நாட்களுக்கு முன்பு நிரூபித்துவிட்டு தற்போது உங்கள் முன் கெத்தாக வந்து நிற்கிறேன். ஒட்டுமொத்த தமிழ்நாடும் திராவிட மாடல் 2.0-க்கு தயாராகிவிட்டது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையாக இருக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடித்தளமாக உள்ளார். சகோதரர் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது, அதனால்தான் அடிமை அதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவ மோடி பார்க்கிறார் என்று ராகுல் காந்தி வலிமையாக பேசியுள்ளார்.
நானும், சகோதரர் ராகுல் காந்தியும் எல்லா திசைகளிலும் நமது கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துகொண்டு வருகிறோம்.
நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை பிரதமர் மோடியின் உரை என்று சொல்வதை விட பாஜக தலைவர் மோடியின் உரை என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது தேசியக்கொடி பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளை திட்டி அவர் பேசியுள்ளார்.
தேர்தல் பரப்புரையில் பேசவேண்டியதை அரசு சார்ந்த உரையில் மோடி பேசியுள்ளார். இது அப்பட்டமான விதி மீறல்.
தேர்தலுக்கு நடுவே தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்தை கொண்டுவந்தால் நாம் சாதாரணமாக விட்டுவிடுவோம் என்று பிரதமர் மோடி நினைத்தார். ஆனால், அதற்கு நேர் மாறாக நடைபெற்றது. தென் மாநில மக்கள் கொதித்துப்போர் இருந்தார்கள், மோடியின் கூட்டணிக்கு படுதோல்வி உறுதியாகிவிட்டது.
திமுக அரசின் திட்டங்கள் மாநிலம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் ஆதரவு பெற்றுள்ளது. நான் எங்கு சென்றாலும் திமுக அரசு திட்டங்களின் பயனாளிகள் உள்ளனர். திமுக அரசு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து நலத்திட்டங்களையும் செய்து வருகிறது.
4 ஆண்டு காலம் ஆட்சி செய்த பழனிசாமியால் தனது சாதனையாக ஒரு திட்டத்தைக்கூட சொல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சியை திராவிட மாடல் ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
திமுக கூட்டணியை தவிர்த்து வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது நேரடியாக பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான். பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுவரை திமுக ஆட்சியில் அமல்படுத்திய திட்டங்களை நிறுத்திவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் மதக்கலவரம் செய்வதுதான் காலகாலமாக பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மணிப்பூர் என நம் கண்முன்னே பல உதாரணங்கள் உள்ளன.
நேரடியாகவும், மறைமுகமாகவும், மாநில கட்சிகளுடனும் பாஜக உள்ளே புகுந்து உருப்பட்ட ஒரு மாநிலம் கூட இந்தியாவில் கிடையாது.
சங்கிப்படை உள்ளே நுழைந்தாலே சர்வ நாசம்தான். திமுக அரசு இருப்பதால்தான் தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள், கொள்கை வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் எந்த கட்சியும் மக்களை பிரித்து வன்முறையை தூண்டி குளிர்காய மாட்டார்கள். ஆனால் பாஜக ஒரு அழிவு சக்தி. அதை உள்ளே விட்டால் நமது மாநிலமும் இருக்காது, மாநில கட்சிகளும் இருக்காது.
பாஜக கூட்டணி தமிழ்நாட்டை மதத்தால் துண்டாக்கும், இந்தியை திணிக்கும். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டு மக்களை அதிகாரமற்ற அகதிகளாக ஆக்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.