தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு: தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து மையங்களுக்கு, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல்; ரூ.543 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.719 கோடி பணம், பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டன. வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச்செல் அனுமதியில்லை. எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் செல்போனை வெளியே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் - 326 பேர், பொதுப் பார்வையாளர்கள் - 136, காவல் பார்வையாளர்கள் - 40, செலவினப் பார்வையாளர்கள் - 150 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 75.064 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 325 வாக்குச்சாவடிகளை பெண்களே நிர்வகிக்க உள்ளனர். 75 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நிர்வகிக்க உள்ளனர்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திரு.வி.க. நகர் தொகுதி நம்மாழ்வார்பேட்டை அரசு பள்ளியில் மட்டும் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 14.59 லட்சமாக உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பு. அதிக வாக்காளர்கள் உள்ள குடியிருப்புகளில் அங்கேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக மாநகர் பேருந்துகளில் இலவச பயண வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

234 தொகுதிகளில் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 300 கம்பெனி சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5,875 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135-பி பிரிவின் கீழ் சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; புகார் அளிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.