தமிழக செய்திகள்

வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம் - எடப்பாடி பழனிசாமி

வரும் 23ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சி களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்-வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.

சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்கிறார். தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:-

வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம்; வரும் 23ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்; பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குடிமராமத்து திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தது அதிமுக அரசு. வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அதில் கூறியுள்ளார்.