கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு

த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் வழக்கு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மற்றொரு வழக்கையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.

வாக்குப்பதிவில் முறைகேடு

தேர்தல் வழக்கு மனுவில், "கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில், சரிபார்ப்புக்காக சில எந்திரங்கள் எடுக்கப்பட்டன. அதில் சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான வி.வி.பேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது.

எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேஷாத்திரி நாயுடு, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

திரும்ப பெற அனுமதி

அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகளில் புதிதாக கடந்த 2025-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர்.

SCROLL FOR NEXT