சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 9-ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.
எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளது. அவரது உடல்நிலையை பல்துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.