சென்னை,
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;
”தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவு துயரமளிக்கிறது; நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர், பின்னர் தவெகவில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அன்றைய முதல்வர் திமுக தலைவரை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலில் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.