தமிழக செய்திகள்

குடியிருப்பு பகுதிக்கு ஜி.பி.எஸ். கருவியுடன் வந்த கழுகு - பொதுமக்கள் அதிர்ச்சி

ஊட்டி வனத்துறையினர் சென்று பார்த்தபோது, குடியிருப்பு பகுதிக்கு வந்தது பிணந்தின்னி கழுகு என்பது தெரிய வந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் மலைப்பாதையில் உள்ள கல்லட்டி பகுதியில் அண்ணா நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கழுகு போல ஒரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. இதை பார்த்த மக்கள், இந்த கழுகு வனப்பகுதிக்குள் பறந்து சென்று விடும் என்று நினைத்த நிலையில், வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே நின்றது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்த கழுகு, பின்னர் வானில் பறந்து மீண்டும் குடியிருப்பு பகுதியிலேயே வந்து அமர்ந்தது. அப்போது அதன் முதுகில் ஜி.பி.எஸ். கருவியும், கால்களில் எண் குறியிடப்பட்ட ஒரு அடையாளமும் இருந்ததை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். மேலும் வேறு எங்கிருந்தோ கண்காணிக்க வந்துள்ளது என்ற அச்சத்தோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊட்டி வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, குடியிருப்பு பகுதிக்கு வந்தது பிணந்தின்னி கழுகு என்பதும், அதன் முதுகில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருப்பதையும் உறுதி செய்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்னர் பி.என்.எச்.எஸ். என்று அழைக்கப்படும் பாம்பே நேச்சுரல் இஸ்ட்ரி சொசைட்டி ஆராய்ச்சி நிறுவனம் இந்த கழுகை மும்பையில் வைத்து வளர்த்து, பின்னர் ஆராய்ச்சிக்காக பறக்க விட்டிருப்பது தெரிய வந்தது. இந்த கழுகு ஏற்கனவே முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பறந்து திரிந்து எப்பநாடு கிராமத்திற்கு வந்துள்ளது. தற்போது அண்ணா நகரில் இருப்பதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.