தமிழக செய்திகள்

திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி கூலி தொழிலாளி கொலை

சரவணன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே உள்ள கீழப்பள்ளிபத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சரவணன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரும், காயாமொழி தெற்கு தெருவை சேர்ந்த கனகசபாபதி மகன் இசக்கிமுத்து (23) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

தகராறு

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வன்னிமாநகரம் அருகே துலுக்கன்குளத்து கரை யில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கையால் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து அருகில் கிடந்த கல்லால் சரவணனின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சரவணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இசக்கி முத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சரவணன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கிமுத்துவை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.