சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் எரிபொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் கீழ் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன.
சுத்திகரிப்பு நிலையங்கள், முனையங்கள் மற்றும் பணிமனைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான வினியோகச் சங்கிலி தடை இல்லாமல் சீராக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, இடையறாத வினியோகம் உறுதி செய்யப்படுகிறது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் 3 நிறுவனங்களும் தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கான சமையல் கியாஸ் வினியோகத்தை யும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் தொடர் முயற்சிகளும், தமிழ்நாடு அரசின் நெருங்கிய கண்காணிப்பின் காரணமாகவும் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்குக் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.