அமைச்சர் மதன் ராஜா 
தமிழக செய்திகள்

வெள்ள பாதிப்பில் இருந்து குறு, சிறு தொழில்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் மதன் ராஜா அறிவுறுத்தல்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சென்னை,

வெள்ள பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – ஒருங்கிணைக்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் தொழில் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க தொழில்முனைவோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிறுவனங்களின் பாதுகாப்பையும், தடையற்ற தொழில் செயல்பாடுகளையும் உறுதி செய்வது அவசியமாகும். எனவே, வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், சிட்கோ தொழிற்பேட்டைகள் மற்றும் இதர தொழில் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மழைக்காலத்திற்கு முன்பாகவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை பாதுகாத்தல்

தொழிற்சாலைகளில் உள்ள விலையுயர்ந்த இயந்திரங்கள், மின்சாதனங்கள், மின்னணுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை நீர் புகாத வகையில் பாதுகாப்பான, உயரமான இடங்களில் வைக்க வேண்டும். மின்சார கட்டுப்பாட்டு பலகைகள், மின் இணைப்புகள் மற்றும் முக்கிய உற்பத்தி உபகரணங்கள் நீரில் மூழ்காதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தொழிற்சாலை வளாகங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர் வெளியேற்ற பாதைகளை சீரமைத்து, நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.

தொழிலாளர்களின் பாதுகாப்பு

தொழிற்சாலை வளாகங்களில் வெள்ளநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால், தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் மின்சார உபகரணங்களை தொடுவதையோ, பாதுகாப்பற்ற நிலையில் மின்சாரத்தை மீண்டும் இயக்குவதையோதவிர்க்க வேண்டும். மின்சார இணைப்புகளை துண்டித்தல் மற்றும் மீண்டும் இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை தகுதிபெற்ற பணியாளர்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவசரகாலத் தொடர்பு எண்கள், முதலுதவிப் பெட்டிகள் மற்றும் பாதுகாப்பான வெளியேற்ற வழிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

காப்பீடு மற்றும் நிதிப்பாதுகாப்பு

தொழில்முனைவோர் தங்களது தொழிற்சாலைக் கட்டடங்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்கள், முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பிற சொத்துகளுக்கான காப்பீட்டு கொள்கைகளில் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும் காப்பீட்டு கொள்கையின் நிபந்தனைகள், விலக்குகள் மற்றும் இழப்பீடு கோருவதற்கான காலக்கெடு ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் சேதமடைந்த பொருட்களை அகற்றுவதற்கு முன்பு பாதுகாப்பான முறையில் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மூலம் ஆதாரங்களைப் பதிவு செய்து, காப்பீட்டு நிறுவனத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

வங்கி கடன் மற்றும் தொழில் மீட்பு

வெள்ளத்தால் தொழில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிறுவனங்கள் தங்களது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி, நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, கடன் மறுசீரமைப்பு, தவணைச் சலுகை, கூடுதல் செயல்பாட்டு மூலதனக் கடன் உள்ளிட்ட உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராயலாம் இத்தகைய உதவிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மதிப்பீடு, தகுதி மற்றும் பொருந்தும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவை. தொழில்முனைவோர் தங்களது தொழில் பதிவு விவரங்கள், சேத விவரங்கள், புகைப்படங்கள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி கடன் தொடர்பான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆய்வு செய்தல்

சிட்கோ தொழிற்பேட்டைகள் மற்றும் இதர தொழில் பகுதிகளில் மறுவாழ்வு நடவடிக்கைகள்: வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்படக்கூடிய தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தொழிற்பேட்டைகள் மற்றும் இதர தொழில் பகுதிகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக, சிட்கோ நிர்வாகமும் சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையங்களும் ஒருங்கிணைந்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய தொழிற்சாலைகளை அடையாளம் காணுதல் மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் நீர் வெளியேற்ற பாதைகளை ஆய்வு செய்தல். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் சேத விவரங்களைச் சேகரித்தல் மற்றும் அவற்றின் தேவைகளை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு குழு

வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் கிளைமேளாளர் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தல்.

விழிப்புணர்வு

இக்குழு வெள்ள பாதிப்புக்குள்ளாகக்கூடிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கண்டறிதல், மழைநீர் வடிகால் மற்றும் நீர் வெளியேற்ற வசதிகளின் நிலையை ஆய்வு செய்தல், தொழில் முனைவோருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் சேத விவரங்கள் மற்றும் தேவைகளை தொகுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அரசு துறைகள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்று தருவதற்கும் தொழில் செயல்பாடுகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இக்குழு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள பாதிப்பு நிலவரம் மற்றும் மறுவாழ்வு பணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை பழுதுபார்த்தல், மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மீட்டமைத்தல், மூலப்பொருட்களை மீண்டும் பெறுதல், உற்பத்தி செயல்பாடுகளை தொடங்குதல் மற்றும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து உரிய உதவிகளை பெறுதல் போன்ற மறுவாழ்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவதற்கு தேவையான துறைசார் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளம் ஏற்பட்ட பின்னர் சேதங்களை சரிசெய்வதைவிட முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொழில்முனைவோருக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைக்க உதவும் எனவே, அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரும் அரசின் மழைக்கால மற்றும் பேரிடர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தொழிலாளர்களின் பாதுகாப்பு, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் பாதுகாப்பு, தொழில் செயல்பாடுகளின் தொடர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிறுவனங்களை விரைவாக இயல்புநிலைக்குக் கொண்டுவர சிட்கோ நிர்வாகம், மாவட்டத் தொழில் மையங்கள் மற்றும், டான்ஸ்டியா மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ. மதன் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT