தமிழக செய்திகள்

தவெகவிடம் அமைச்சரவையில் இடம் கேட்கப்பட்டதா? எஸ்.பி வேலுமணி தரப்பு விளக்கம்

தவெக அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்கும் எண்ணம் எங்களுக்கில்லை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் அதிகரித்தது.

சட்டமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படலாம் என பேசப்பட்டது.ஆனால், தவெக அமைச்சரவையில் இவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டது. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்பி வேலுமணி கூறியதாவது;

இப்போதும் எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். பதவிக்காக ஒரு பிரிவாக செயல்படுகிறோம் என்பதை ஏற்க முடியாது. முதல் அமைச்சர் விஜய் எங்களை சந்தித்த போது சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை 10 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளோம். தவெகவிடம் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. எங்கள் மீது அவதூறு பரப்புவதை டீம் வொர்க்காக செய்கிறாகள். தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக நாங்கள் கூறவில்லை. தவெகவும் இதனை தெரிவித்துள்ளது. தவெகவுக்கு மக்கள் ஆதரவு அளித்ததால் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். திமுக எதிர்ப்பில் தவெகவும் நாங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருந்ததால் ஆதரவளித்தோம். அதிமுகவில் பிளவு இல்லை.சிறிய கருத்து வேறுபாடுதான். எங்களை பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் விளைவிக்கிறார்கள். கட்சியை உடைக்கும் எண்ணம் இல்லை. ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதே எண்ணம்” என்றார்.