சென்னை,
அரசு பேருந்தில் ஈரோடு முதல் துபாய் வரை செல்ல ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் போலியானது என்றும் தொழில்நுட்ப முறையில் மாற்றியமைக்கப்பட்டது என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாசில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது.
பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த ‘பவானி – கோயம்புத்தூர்’ என்ற பயண விவரத்தை ‘பவானி – துபாய்’ எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.