சென்னை,
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான முழு ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஆபாச குறுஞ்செய்தி வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்தோம். ஆனால் டிஜிபி இல்லை. டிஜிபியை எங்கே என்று கேட்டால் சிங்கப்பெண் படையின் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாகக் கூறினார்கள். நாங்கள் கேட்பது என்னவென்றால், எங்கே இருக்கிறது இந்தச் சிங்கப்பெண் படை? அப்படி என்ன பயிற்சி கொடுக்கப்படுகிறது? அவர்களுக்கு என்னதான் வேலை?. அனைவரும் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும், யாரேனும் சிங்கப் பெண் படையை பார்த்துள்ளோமா?.
குற்ற செயல்களில் தவெக நிர்வாகிகளே ஈடுபடுகின்றனர்; தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு கலெக்டருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ் அனுப்புவது முதல் முறை. இதுபோன்று இந்தியாவிலேயே நடந்ததே கிடையாது. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரை தவெக தொண்டர்கள், அப்யூசிவ் விர்சுவல் வாரியர்ஸ் தரக்குறைவாக பேசுகின்றனர். குடித்துவிட்டு, ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சென்று தகராறு செய்தது எங்கேயாவது நடந்திருக்கிறதா?. தவெக மே மாசம் ஆட்சிக்கு வந்த நிலையில் ஜூலை மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை மாதம் ஆட்சியர் புகார் அளித்த நிலையில் அதை தலைமைச் செயலாளர் முதல்-அமைச்சர் விஜய்யிடம் கூறினாரா?.. ஆனால் தலைமைச் செயலாளர் புகாரை மூடி மறைத்து பேரம் பேசியுள்ளார். இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலையிலேயே ஆட்சியர் புகார் அளித்துள்ள நிலையில் 116 நாட்களாக முதல்-அமைச்சவர் விஜய் தூங்கிக்கொண்டிருந்தாரா?. தூங்கிக் கொண்டிருக்கும் அரசு, தூங்கு மூஞ்சி முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்.
சங்கி அமைச்சர், பொய் சொல்வதற்காகவே இருக்கும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அப்படி நடக்கவில்லை என கூறினார். இந்த வழக்கில் அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புகார் அளித்துள்ளோம். மனு கொடுக்க வந்தவரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரையும் கைது செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.