தமிழக செய்திகள்

மாத்திரைக் கவர்களில்.. இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா? - நயினார் நாகேந்திரன்

திமுகவின் மலிவான மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது உள்ளபடியே வேதனை அளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைக் கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

களங்கம் ஏற்படுத்தும் செயல்

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மருத்துவமனையின் வாசலுக்குள்ளும் மொழி அரசியலை இழுத்து வருவது, “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்ற நமது பெருமைக்குரிய அடையாளத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் செயல்!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைக் கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா?

இது இந்தித் திணிப்பு குறித்த விவாதமே அல்ல. மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைத் தகவல், அதை வாங்கும் நோயாளிக்குப் புரிய வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியம்.

மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் பிற மாநிலத்தவர்கள்

காலங்காலமாக மொழியை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, இதிலும் ஒரு சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்ற பெயரில், அவர்களின் அரசியலுக்கே அடிபணியும் வகையில், பயன்பாட்டிலிருந்த மருந்துக் கவர்களை அகற்றுவது, ஒரு பொறுப்புள்ள, மனிதாபிமானமிக்க அரசின் நடவடிக்கையாக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களிலிருந்து வந்து வாழ்ந்து, உழைத்து வரும் பல லட்சம் மக்களும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கடந்து, அவர்களுக்கும் சரியான மருத்துவத் தகவல், புரியும் வகையில் கிடைக்க வேண்டும். அதுவே அடிப்படை மனிதநேயம்.

தமிழின் உரிமையைப் பாதுகாப்பதையும், ஒரு நோயாளிக்கு அவர் புரியும் மொழியில் உயிர் காக்கும் தகவலை வழங்குவதையும் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களாக மாற்றுவது அபத்தம்.

ஆக, திமுகவின் மலிவான மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது உள்ளபடியே வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT