பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
வீடுகளில் தண்ணீர் புகுந்தது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோர பகுதிகளில் 20 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பள்ளி, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிபாளையம் முருகன், ஓங்காளியம்மன் கோவில்கள் மற்றும் கரையோரம் உள்ள வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
கலெக்டர் ஆய்வு
மேலும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை அருகில் ஜனதா நகர், ஜே.ஜே.நகர் பகுதிகளில் சுமார் 30 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 50 குடும்பத்தை சேர்ந்த 250 பேர் அருகில் உள்ள அரசு பள்ளி, திருமண மண்டபம், நகராட்சி மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, அடிப்படை வசதிகளை நகராட்சி துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் காவிரி கரையோர பகுதிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காவிரி ஆற்று உயர்மட்ட பாலத்திற்கு சென்று ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதை பார்வையிட்டனர். பின்னர் வருவாய்த்துறையினரிடம் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி விட்டார்களா?. இவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பஸ் போக்குவரத்து
பின்னர் கலெக்டர் கூறுகையில், பழைய ஆற்றுப்பாலம் கட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பாலத்தின் ஸ்திரத்தன்மை பற்றி யாரும் குறை கூறவில்லை. எனவே போக்குவரத்து நிறுத்துவதை பற்றி முடிவு செய்யவில்லை. தேவை என்றால் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் இளவரசி, துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் உடனிருந்தனர்.