சென்னை,
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் சென்னை பெரம்பூர் பி.பி.ரோட்டில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 25-ம் தேதி அதிகாலை செந்தில்குமார் பணியில் இருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது அலுவலகத்தின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பார்த்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவரது வலது கையில் மணிக்கட்டு வரை துண்டானது. மேலும் உடலிலும் பலத்த தீக்காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.