பென்னாகரம்,
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பதும். குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 8-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 87 அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. அணைக்கு காலையில் வினாடிக்கு 12 ஆயிரத்து 883 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 13 ஆயிரத்து 538 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன் பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.