தமிழக செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது.

பென்னாகரம்,

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும். குறைவதுமாக இருந்து வருகிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் நீர்வரத்து நேற்று மாலையில் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT