தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை

ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

ஒகேனக்கல்

இந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

தடை

மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நீர்மட்டம்

இதே மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 311 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 78.69 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.