தமிழக செய்திகள்

நீர்வரத்து அதிகரிப்பு: 80 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர்,

நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 80 அடியை நெருங்குகிறது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவ மழை பெய்யாத காரணத்தால் நீர்வரத்து குறைந்தது. அதேநேரம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து 50 அடிக்கு வந்தது. தொடர்ந்து நீலகிரி மலைப் பகுதியில் மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதனால் நீர்த்தேக்க பகுதியில் அதை ஒட்டி உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கான வாழைகளை நடவு செய்தனர். இந்த வாழைகள் தற்போது செழிப்பாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும், அதே நேரம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது.

80 அடியை நெருங்குகிறது

அதன்பின்னர் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இருந்த போதிலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்திக்காக அவ்வப்போது தண்ணீர் திறப்பதாலும் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து 80 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 411 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

SCROLL FOR NEXT