சேலம்,
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 13 ஆயிரத்து 674 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் 77.57 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.03 அடியாக உயர்ந்தது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயருவதிலும் சிக்கல் ஏற்படும்.
வருணபகவான் தொடர்ந்து கருணை காட்டினால் தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் வகையில் நீர்மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் கூறினர்.