தமிழக செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி!

நீர்மட்டம் இரண்டு நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

பவானிசாகர்,

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி யாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்தது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவதும் பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென இறங்கி 50 அடிக்கு வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அதன் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்தது. இது நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 488 கன அடியாக அதிகரித்தது. கடந்த 7-ந் தேதி மாலை 6 மணி நிலவரப்படி 54.38 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 56.59 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT