மானாமதுரை,
போதிய மழை இல்லாததால் வைகை ஆற்றுப்படுகை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத காரணத்தினாலும், தென் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாலும் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீராதாரமான வைகை ஆறு வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.
குறிப்பாக மழைக்காலங்களில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளமென ஆர்ப்பரித்து ஓடும் மானாமதுரை அருகே கீழப்பசலை மதகு அணை பகுதி, தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வறண்டு பாலை வனமாக காட்சியளிக்கிறது. தடுப்பணையின் மதகுகள் அனைத்தும் துருப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தடுப்பணையை ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதிகள் முழுவதும் ஆழமான வெடிப்புகளுடன் தரிசு நிலம் போல் காட்சியளிக்கின்றன.
வழக்கமாக மதகு அணையில் மீன்பிடிக்கவும், தண்ணீரின் அழகைக் காணவும் குவியும் மக்கள் கூட்டம் இன்றி, அப்பகுதி முழுவதுமாக ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வைகை ஆற்று நீரை மட்டுமே பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கின றன. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற வேண்டிய விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் பல நூறு அடிகள் கீழே சென்றுவிட்டதால், ஆழ்துளை கிணறுகளும் செயலிழந்து வருகின்றன.
ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீர் திட்டக்கிணறுகளில் நீர்மட்டம் வற்றிவிட்டதால், கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்க தொடங்கியுள்ளது. ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மானாமதுரை மற்றும் தென் மாவட்டக் கிராமங்களுக்கு லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.