திருவள்ளூர்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 7250 கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை தண்ணீர் திறப்பு 6 ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 35 அடியில் 32.85 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மி. கனஅடியில் 2478 மி. கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதேபோல் பிஞ்சிவாக்கம், அதிகத்தூர், புட்லூர் ஆகிய தடுப்பணை நிரம்பி புதுச்சத்திரம் பகுதியில் கூவம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
இதனால் புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 50க்கும் - மேற்பட்ட கிராம மக்கள் 20 கி.மீ., தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.