தமிழக செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பு

648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் சிறப்பு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் கருகாமல் காப்பாற்றப்படும்.

குடிநீர் தட்டுப்பாடு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போதைய கோடைக்கால சூழலில், காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும், கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது.

முதல்-அமைச்சர் அதிரடி உத்தரவுவிவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தண்ணீரை திறக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

15 நாட்கள் தண்ணீர்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2026–2027 ஆம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களில் நிலுவையிலுள்ள பயிர்களை காப்பற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.15 நாட்கள் தண்ணீர் நாளை முதல் ஜூலை 28ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு இந்த தண்ணீர் தங்கு தடையின்றி திறந்து விடப்படும்.

15,743 ஏக்கர் பாசன வசதி

மொத்தம் 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15,743 ஏக்கர் நிலங்கள் பலன்அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்கண்ட வட்டங்கள் பெருமளவில் பயனடைய உள்ளன: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி இந்த மூன்று வட்டங்களில் உள்ள சுமார் 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும்.

விவசாயிகள் மகிழ்ச்சி

முதல்-அமைச்சரின் இந்த திடீர் உத்தரவால் கருகும் நிலையில் இருந்த தங்களது பயிர்கள் உயிர் பெறும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சரியான நேரத்தில் தண்ணீரை திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு இப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.