சென்னை,
சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் தற்போது 80 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது.அதேவேளை, விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ளதால் சென்னையில் குடிநீர் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழையின்போது சென்னை குடிநீர் ஏரிகள் முழுவதும் நிறைந்ததால் ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜனவரி மாதத்தில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் தண்ணீர் நிறுத்தபட்டு இருந்தது.
இந்நிலையில், குடிநீர் ஏரிகளில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் கோடையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்கும்படி தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நதி நீர் நாளை மறுதினம் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் பாய்ந்து பூண்டி ஏரிக்கு சென்றடையும்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது பூண்டி ஏரியில் 3.159 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இது ஏரியின் மொத்த கொள்ளளவில் 97.77 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.
கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் வந்தால் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.