தமிழக செய்திகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 28-ந் தேதி நடக்கிறது.

மதுரை,

மதுரை சித்திரை திருவிழா என்பது சைவமும், வைணவமும் இணைந்த உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற விழா ஆகும். இதில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மாசி வீதிகளில் தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் அழகர் இறங்கி அருள்பாலிக்கும் வைபவம் ஆகியவை முத்தாய்ப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.

இவ்வாறு முத்திரை பதிக்கும் இந்த சித்திரை பெருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பார்கள். 26-ந் தேதி முதல் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்குள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. 27-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 28-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இதற்கிடையே கள்ளழகர் கோவில் சித்திரை விழாவில் 29-ந் தேதியன்று அழகர் மதுரை புறப்படுகிறார். 30-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், மே 1-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் கள்ளழகரகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

SCROLL FOR NEXT