தமிழக செய்திகள்

‘நாங்கள் எட்டப்பன் அல்ல கட்டபொம்மன்’ - ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழ் மக்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டே எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க., தற்போது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.

தி.மு.க.வின் ஆதரவு நிலைப்பாடு

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரவு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறான் ஆகியோர் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று சென்னை வர உள்ளனர்.

ராகுல் காந்தி பதிவு

இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும், நானும் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடம் வலியுறுத்துவதற்காக சென்னை புறப்பட்டு செல்கிறோம்.

நாடாளுமன்றத்தை 850 தொகுதிகளாக விரிவாக்கம் செய்வது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும். இது, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தங்களுக்கு சாதகமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் மாற்றி அமைக்க வரம்பற்ற வாய்ப்பை வழங்கும்.

சகோதரர் ஸ்டாலின் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான சக்திகளை ஒரு பாறை போல உறுதியாக எதிர்த்து நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதில்

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“அரசியலமைப்பையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தி.மு.க.வின் வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தமிழ்நாட்டின் நலன்களையும், நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாகக் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம்.

இந்த பாதையில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT