தமிழக செய்திகள்

‘த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அவசர கதியில் முடிவெடுக்க முடியாது’ - திருமாவளவன்

விஜய் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இதனிடையே தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தந்தி டி.வி.க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “த.வெ.க. தலைவர் விஜய் தொலைபேசியில் பேசி என்னிடம் ஆதரவு கேட்டார். அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து விஜய் பேசவில்லை. விஜய் நேரில் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. எங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, த.வெ.க. ஆதரவு குறித்த முடிவை எடுப்போம். ஆதரவளிப்பதில் அவசர கதியில் முடிவெடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.