தேசிய செய்திகள்

‘நாங்கள் சாதி, இனம், மதம் சார்ந்த அரசியலை செய்வதில்லை’ - ராஜ்நாத் சிங்

நாடு மற்றும் நாட்டு மக்களின் சுயமரியாதையை விட மேலானது எதுவும் இல்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

16-ம் நூற்றாண்டில் தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியை ஆட்சி செய்தவர் மன்னர் மகாராணா பிரதாப். அவரது உருவச் சிலை உத்தர பிரதேச மாநிலத்தின் அகர் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;-

“நாடு மற்றும் நாட்டு மக்களின் சுயமரியாதையை விட மேலானது எதுவும் இல்லை. இதே எண்ணத்துடன்தான் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பும், மரியாதையும் கிடைப்பதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.

நமது பிரதமர் 'அனைவருக்கும் ஆதரவு, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் நம்பிக்கை, அனைவருக்கும் பிரார்த்தனை' என்று கூறுவதைப் போலவே, நாங்களும் அந்த உத்வேகத்தைப் பெற்றோம். எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியுமே எங்கள் முன்னுரிமை.

மேலும், எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சமமானவரே. நாங்கள் சாதி, இனம், மதம் சார்ந்த அரசியலை செய்வதில்லை. நாங்கள் நீதி மற்றும் மனிதாபிமான அரசியலை செய்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.