தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்தபோது எங்களுக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை; வீரபாண்டியன்

தி.மு.க. எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ​மேட்டூர் அணை திறக்கப்படணும். உபரி நீர் உள்பட தண்ணீர் நமக்கு திறந்துவிடப்பட வேண்டும் என்பது ஏற்கனவே ஒப்பந்தம். அதை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். குடிநீருக்கே தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ​எனவே, கர்நாடக அரசு ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும். ​தமிழக அரசு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

பொது விடுமுறை

பயிர்க்கடன்கள் உள்பட மத்திய அரசு நமக்குரிய நிதியை வழங்க வேண்டும். ஏற்கனவே பல நிதிகள், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதிகள் கிடப்பில் இருக்கிறது. ​100 நாள் வேலைத் திட்டத்திற்கு ​குறைந்தது ரூ.700 வழங்க வேண்டும். மேகதாது பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.

அழுத்தம் கொடுக்கவில்லை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைப் பொறுத்தவரை நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, தி.மு.க. எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும், நிர்ப்பந்தத்தையும் அளிக்க வில்லை. ​அரசியல் சூழலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்திருக்கிறது. அவர்கள் எங்களிடம் ஆதரவு கேட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாத சூழல். இதனால் நாங்கள் ஆதரவு அளித்தோம்.எந்தக்குதிரை பேரத்தையும் கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை, விரும்புவதில்லை. அதேபோல் எந்த சோபா அரசியலையும், எந்த கல்லாப்பெட்டி அரசியலையும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கிறோம். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சி தாவுவது எங்களுக்குப் பொருத்தமில்லை. விலை பேசுவதும் பொருத்தமில்லை. அதுபோன்ற அரசியலில் கம்யூனிஸ்டுகள் என்றைக்குமே ஈடுபட்டதில்லை. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை, நாங்கள் அதனை நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.