தமிழக செய்திகள்

பள்ளிக்கல்வி துறையில் சுமார் 80 முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினோம்- அன்பில் மகேஷ்

மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டுமே தவிர சமூகத்தை பின்னோக்கி இழுப்பதாக இருக்கக்கூடாது என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை,

முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

80 முன்னோடி திட்டங்கள்

நம்முடைய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசின் மூலம் அன்றைய முதல்-அமைச்சர் - எங்களுடைய கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சுமார் 80 முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினோம்.

மூன்று திட்டங்கள்

அவற்றில் ஏ.ஐ தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை மாணவர்களிடையே வளர்க்க டிஎன் ஸ்பார்க்“(TN SPARK ) திட்டம்”, உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் நம்முடைய அரசுப்பள்ளி மாணவ செல்வங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்டம் தோறும் “மாதிரி பள்ளிகள் திட்டம்”, அதேபோல ஒன்றிய அளவில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க “வெற்றிப்பள்ளிகள் திட்டம்” ஆகிவையும் முக்கியமானவை. இந்த மூன்று திட்டங்களும் மாணவ செல்வங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து வருகின்றன.

மனமார்ந்த வாழ்த்துகள்

அத்தகைய தாக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள இந்தியாவின் முன்னணி திங்க் டேங்க் (Think Tank) அமைப்பான ஸ்கோச் அறக்கட்டளை, கோல்டு,சில்வர் ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று திட்டங்களுக்கும் ஸ்கோச்2026 என்ற விருதினை வழங்கி இருக்கிறது. அதற்காக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

செயல்திட்டம்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான செயல்திட்டம் (Blue Print) என்று சொல்லத்தக்க அளவில் திராவிட மாடல் அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் எங்களுடைய தலைவர். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் அவற்றையெல்லாம் முறையாக பின்பற்றி - செயல்படுத்தினாலே தமிழ்நாட்டின் மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை மிகச்சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க முடியும்.

ரீல்ஸ்

அதற்கு மாறாக, பள்ளிகளுக்குள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அனுப்பி, வகுப்பறைக்குள் ரீல்ஸ் எடுப்பதையும், கட்சிப்பெயரையும், முதல்-அமைச்சர் பெயரையும் சொல்லி முழக்கமிட செய்வதையும் அறவே தவிர்க்க வேண்டும். அது ஆசிரிய பெருமக்களுக்கு தர்மசங்கடத்தையும், மாணவர்களிடையே கவன சிதறலையும் தான் உருவாக்குகிறதே தவிர, அவர்களின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்க போவதில்லை.

மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டுமே தவிர சமூகத்தை பின்னோக்கி இழுப்பதாக இருக்கக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.