சென்னை,
மாநிலங்களை சக்தி படைத்தவையாக மாற்றி, தேசத்தை சக்திபடைத்தவையாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
நெடுஞ்சாலைகள், ரெயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-
சிவபெருமானின் புனித பூமியான தமிழ்நாட்டில் நான் ஜலகண்டேஸ்வரரின் நல்லாசிகளை பெற்றேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நிகழ்ச்சி சரித்திர நிகழ்வாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளது. உங்கள் நல்லாசியுடன் எனது 25 ஆண்டு கால மகத்துவமான பயணம் நிறைவடைந்தது.
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, தமிழக முதல்-அமைச்சர்களாக பணியாற்றிய கருணாநிதி, ஜெயலலிதா அவர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். பிரதமரான பிறகும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்று இதே உறுதியுடன் முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து, தமிழக வளர்ச்சியில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற எனது உறுதிப்பாடு தொடர்கிறது.
நகர மயமாக்கல் ஒரு சவால் அல்ல, அது ஒரு வாய்ப்பு.
2014ல் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் நிலையங்கள் இருந்தன. இன்று 25 நகரங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் செயல்படுகின்றன. 2014-ல் மெட்ரோ வலைப்பின்னல் 250 கி.மீ தான் இருந்தது. தற்போது 1,100 கி.மீ வரை உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வலைப்பின்னல் விரிவாக்கம் மூலம் அனைவருக்கும் போக்குவரத்து வசதி எளிதாகிறது.
மாநிலங்களை சக்தி படைத்தவையாக மாற்றி, தேசத்தை சக்திபடைத்தவையாக மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தி துறையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல்-அமைச்சராக இருந்த காரணத்தால் மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து நான் செயல்படுகிறேன். நாட்டின் குடிமக்கள் கூட்டுறவு கூட்டாட்சி மீதான நம்பிக்கை மேலும் வலுப்பட்டு வந்துள்ளது. சிறப்பான போக்குவரத்து சாலையை விரிவாக்கம் செய்தால் போதாது, உட்கட்டமைப்பு முக்கியது. போக்குவரத்து துறையை மேம்படுத்தினால் மக்களின் வாழ்க்கை எளிதாகும். புதிய திட்டங்களால் தமிழ்நாடு வளர்ச்சியடையும்; வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டில் இருந்து வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.