தமிழக செய்திகள்

சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள அடிப்படையில் தயாராக வேண்டும் - வானதி சீனிவாசன்

எல்-நினோ சிறப்பு செயல் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

'சூப்பர் எல்-நினோ'

மத்திய பசிபிக் பெருங்கடலில், அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில், பெருங்கடல் பரப்பின் வெப்பம் அதிகரிப்பதை 'எல்-நினோ' என்று அழைக்கிறார்கள். மத்திய பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்ப நிலை 0.5 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் நிலவினால் 'எல்- நினோ' எனக் கூறப்படும். சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தால் 'சூப்பர் எல்-நினோ' என்று சொல்கிறார்கள்.

இந்த ஆண்டு 'சூப்பர் எல்-நினோ' பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இப்போதே தெரிய தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தீவிரமடையும் தென் மேற்கு பருவ மழை மிகமிக குறைவாகவே உள்ளது. காவிரி உட்பட தென் மாநில நதிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பருவமழை பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வழக்கமாக ஜூன் 12ல் பாசனத்திற்காக திறக்கப்படும் மேட்டூர் அணையை திறக்க முடியவில்லை.

சூப்பர் எல்-நினோவால் அதிக வெப்பஅலை, அதிக வறட்சி, அதிக மழை போன்ற பல்வேறு பேரிடர்களை தமிழ்நாடு சந்திக்க நேரிடும். விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு தயாராக வேண்டும். ‘சிறப்பு செயல் திட்டத்தை’முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உருவாக்க வேண்டும்.

வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

* பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சூப்பர் எல்-நினோ பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க, சிறப்பு எல்-நினோ கண்காணிப்பு அலகை அமைத்துள்ளது. அதுபோன்ற அமைப்பை தமிழ்நாடு அரசும் அமைக்க வேண்டும்.

* பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க, தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க வழி செய்ய வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும்.

* குடிநீர் பஞ்சத்தை தவிர்க்க சென்னையில் செயல்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். தேவைப்படின் மற்ற கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் அலகுகளை அமைத்து உள் மாவட்டங்களுக்கும் குடிநீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

* வெப்பநிலை அதிகரிப்பால் ஏ.சி. பயன்பாடு அதிகரிக்கக் கூடும். நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே, சூர்யசக்தி. காற்றாலை, குப்பையில் இருந்து மின்சாரம் போன்ற மாற்று வழிகளில் மின் உற்த்தியை அதிகரிக்க வேண்டும்.

* அதிக வெப்பத்தின் தாக்கத்தை மரங்கள் குறைக்கும். எனவே, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வறட்சியை தாங்கி வளரக் கூடிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

* அதிக வெப்பத்தால் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். மருத்து சிகிச்சையும் தேவைப்படலாம். இதற்கு அரசு மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து குழந்தைகளை தாக்க தடுப்பூசிகள் போடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

* சுற்றுச்சூழல் மாசு அதிகரித்தால் வெப்பநிலை தாக்கத்தின் பாதிப்புகள் மேலும் மோசமடையும். எனவே, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தொழிற்சாலைகளை கண்காணிக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் இருப்பதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

* சூப்பர் எல்நினோவால் விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். இதை எதிர்கொள்ள வேளாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்குப் பதிலாக அதிக வருவாயும், தேவையும் அதிகமாக உள்ள பயிர்களை பயிரிட தமிழ்நாடு அரடு ஊக்குவிக்க வேண்டும்.

* தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இதுகுறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், காலநிலை நிபுணர்களுடன் ஆலோசித்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்காக சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.