அறந்தாங்கி,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, சாமானிய மக்களின் நலன்களை புறந்தள்ளி, ஊழல், முறைகேட்டை மட்டுமே முழுநேர வேலையாக செய்து வந்த தீயசக்தி திமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்ற உறுதியோடு வாக்களிக்க காத்திருக்கும் தமிழக மக்களின் பேராதரவோடு பயணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்தை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், அண்ணன் சி. விஜயபாஸ்கரோடு பங்கேற்று உரையாற்றினேன்.
ஏப்ரல் 16 ஆகிய இந்த நாள், வரலாற்று சிறப்புமிக்க நாள். நாடு முழுவதும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்தத்தை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்யும் சட்ட திருத்தத்தை எரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்? பெண்கள் முன்னேற்றத்திற்கா? பெண்களின் வளர்ச்சிக்கா? அரசியல் செய்ய வேண்டும் என அவர் செய்துள்ள இழிவான செயலுக்கு தமிழக பெண்களே வரும் தேர்தலில் படுதோல்வியை பரிசளிக்கப் போவது உறுதி.
அறந்தாங்கியில் பொறியியல் கல்லூரி திறக்கப்படும், அறந்தாங்கியில் சுற்றுச்சாலை அமைக்கப்படும், கோட்டைப்பட்டினத்தில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்த திமுக கடந்த ஐந்தாண்டுகளில் எதையும் செய்யவில்லை என்பதே உண்மை. அதனால் தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சாவி கொடுக்கும் பொம்மையை போல, காலை முதல் மதியம் வரை டெல்லி என்றும், பின்னர் மாலை வரை ஹிந்தி என்றும், தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள் என்றும் பேசி வருகிறார். அதைத்தவிர மக்களிடம் சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை.
கொடுங்கோல் ஆட்சிக்கும், ஊழல் அராஜகத்திற்கும் அடையாளமான திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்திற்கு வளர்ச்சி கிடைக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வெற்றி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அறந்தாங்கி மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! அறந்தாங்கி வளம் பெறட்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.