சென்னை,
மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து, மானியத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் மிகுந்த கவலையளிக்கிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் குடும்பங்களின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயுவை வாங்குவதற்கே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது என்றாலும், அதன் முழுச் சுமையையும் பொதுமக்களின் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறனுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
புதிய எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதிலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மக்கள் குறைந்த எடையிலான சிலிண்டர்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேவேளையில், சில இடங்களில் அதிக விலைக்கு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
எரிவாயு தட்டுப்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி பதுக்கல், கள்ளச்சந்தை மற்றும் செயற்கையான விலையேற்றம் நடைபெறாமல் ஒன்றிய, மாநில அரசுகள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் போதுமான அளவு சமையல் எரிவாயு தடையின்றிக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து, மானியத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும். குடும்பங்களின் சமையலறையைப் பாதிக்கும் எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் நேரடியாக மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.
உலகளாவிய நெருக்கடிகளின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கான பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. அந்த நெருக்கடியின் விலையை மக்கள் செலுத்தும் நிலையை உருவாக்குவது அரசின் கடமையல்ல.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாக போக்கி, நியாயமான விலையில் தடையின்றி எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.